கிள்ளான், ஜன. 16 - செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் சார்பில் மாபெரும் பொங்கல் விழா கடந்த செவ்வாய்க்கிழமை புக்கிட் திங்கி சிவன் ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, கோலாட்டம், பாரம்பரிய இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அங்கு வருகை தந்த மக்கள் புத்தம் புதிய பாணிகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் உழவர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்து சிறப்பாகக் கொண்டாடினார்.
பயிர்கள் செழிக்க தனது சக்தியை வழங்கும் சூரியனுக்கும் அந்த பயிர்களை உணவாக்கும் விவசாயிகளுக்கும் மக்கள் நன்றி செலுத்தும் விதமாக இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து தமிழ் மக்களும் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
பல்லினம் வாழும் இந்த நாட்டில் சமத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் இவ்வாறான கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவது இந்த நாட்டின் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.


