(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன 13- நாளை கொண்டாடப்படவிருக்கும் பொங்கல்
திருநாளை முன்னிட்டு சுங்கை பூலோ தொகுதியிலுள்ள 4,000 வசதி
குறைந்த குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்களை தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்.
பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய இந்த
அன்பளிப்புகளை வழங்கும் பணியை கடந்த ஈராண்டுகளாக
இத்தொகுதியில் தாங்கள் மேற்கொண்டு வருவதாக தொழில்முனைவோர்
மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான அவர்
தெரிவித்தார்.
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை தொகுதி மக்கள் வெகு
விமரிசையாக கொண்டாடும் வகையில் “மகிழ்ச்சிப் பொங்கல்“ எனும்
கருப்பொருளில் பொங்கல் பொருள்களை வழங்கும் நிகழ்வுக்கு தமது
தொகுதி ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கும் நமது சமூகத்திற்கு மகிழ்ச்சியையும் வளப்பத்தையும் இந்த
திருநாள் கொண்டு வரும் எனத் தாம் பெரிதும் நம்புவதாக அவர் கூறினார்.
‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்‘ என்ற முதுமொழிக்கேற்ப வளர்ச்சி மற்றும்
வெற்றியை நோக்கி பயணிப்பதற்கான புதிய தொடக்கமாக இந்த
திருநாளை கருதி முன்னோக்கிச் செல்வதில் முனைப்பு காட்ட வேண்டும்
என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திய சமூகம் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். நமக்கிடையிலான
வலுவான ஒற்றுமை அளப்பரிய நன்மைகளையும் அனுகூலங்களையும்
சமூகத்திற்கு கொண்டு வரும். இந்த இனிய தருணத்தில் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைருவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.



