(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன. 9- இவ்வாண்டு முதலாம் வகுப்பில் சேரவுள்ள பந்திங்
தொகுதியைச் சேர்ந்த 642 மாணவர்கள் தாவாஸ் எனப்படும் தாபோங்
வாரிசான் அனாக் சிலாங்கூர் அறநிதித் திட்டத்தின் கீழ் பள்ளி உபகரண
உதவியைப் பெறுகின்றனர்.
இந்த உதவித் திட்டத்தில் பதிவு செய்துள்ள தாவாஸ் உறுப்பினர்கள்
இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதிக்குள் பள்ளி
உதவிப் பொருள்களை பந்திங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில்
பெற்றுக் கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
மனிதவளம் மற்றும் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான
வீ.பாப்பராய்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
தாவாஸ் உறுப்பினர்களுக்கு இந்த பள்ளி உபகரணங்களை விநியோகிக்கும்
பணி தொகுதி சேவை மையத்தின் அலுவலக நாட்களில் பணி நேரமான
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மற்றும் பிற்பகல் 2.00
மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று அவர்
தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமத்தை எதிர்நோக்கும் குறைந்த
வருமானம் பெறும் பெற்றோர்களின் சுமையை இந்த திட்டம் ஓரளவு
குறைக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிறந்த சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 29,105
தாவாஸ் உறுப்பினர்கள் இந்த பள்ளி உபகரண உதவித் திட்டத்தின் கீழ்
பயன் பெறுவர்.
இம்மாணவர்களுக்கு புத்தகப் பை, எழுது பொருள்கள், குடிநீர் போத்தல்,
உணவும் கலன் உள்ளிட்டப் பொருள்கள் வழங்கப்படும்.
மாநிலத்தில் பக்கத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர்
அமல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக இந்த தாவாஸ்
திட்டம் விளங்குகிறது. சிலாங்கூரில் பிறந்த, நிர்ணயிக்கப்பட்ட
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மற்றும் பிறந்து மூன்றாண்டுகளுக்குள்
பதிவு செய்த குழந்தைகள் 18 வயதை அடையும் போது 1,500 வெள்ளியை
பெற இத்திட்டம் வகை செய்கிறது.


