(ஆர். ராஜா)
ஷா ஆலம், ஜன. 9- இங்குள்ள புக்கிட் கெமுனிங் சாலையோரம் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டிய குற்றத்திற்காக ஷா ஆலம் மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஏ.) அமலாக்க அதிகாரிகள் ஆடவர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த அதேவேளையில் லோரி ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த சாலையில் தூய்மைக் கண்காணிப்பை மேற்கொண்ட போது இந்த சட்டவிரோதக் குப்பை கொட்டும் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.
தடை செய்யப்பட்ட பகுதியில் அதாவது பொது இடத்தில் ஆடவர் ஒருவர் குப்பைகளை கொட்டியதைக் அமலாக்க அதிகாரிகள் கண்டனர். இதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு (எம்.பி.எஸ்.ஏ) துணைச் சட்டத்தின் 4வது ஷரத்தின் படி அநநபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளையில் 2007ஆம் ஆண்டு (எம்.பி.எஸ்.ஏ) துணைச் சட்டத்தின் 4 மற்றும் 21வது ஷரத்தின் கீழ் அவர் பயன்படுத்திய லோரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அப்பதிவு தெரிவித்தது.
கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்ப்பதன் மூலம் தூய்மையை பராமரிப்பதன் அவசியத்தை பொது மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூய்மை மற்றும் சுற்றுச்சூழலைப் பேணுவதன் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துவதில் இந்த நடவடிக்கை பயன்மிக்கதாக இருக்கும் எனவும் நாங்கள் நம்புகிறோம் என அது தெரிவித்தது.
இவ்வாண்டு தொடங்கி சட்டவிரோதமாகக் குப்பைகள் வீசப்படும் விவகாரத்தை கையாள்வதில் கோத்தா கெமுனிங் தொகுதி ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் வட்டார மக்களுடன் ஒத்துழைக்கும் என்று கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் முன்னதாகக் கூறியிருந்தார்.
குறிப்பாக, புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் சாலையோரம் குப்பைகளை வீசும் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமது தரப்பு அங்குள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புக்கிட் கெமுனிங் பகுதியில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டப்படுவதைக் கண்காணிக்க குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்தகையச் சம்பவங்கள் படம் பிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஷா ஆலம் மாநகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் தெரிவித்தார்.








