ஷா ஆலம், ஜன. 8- வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டிக்கு (சுக்மா) உயர் ஆட்டத்திறன் கொண்ட விளையாட்டாளர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்ப சிலாங்கூர் விளையாட்டு மன்றம் திட்டமிட்டுள்ளது.
வூஷூ, பளு தூக்குதல், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் உயர் ஆட்டத் திறன் கொண்ட விளையாட்டாளர்கள் இத்திட்டத்தில் இலக்காகக் கொள்ளப்படுவர் என்று விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
அந்த விளையாட்டாளர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்க விரும்புகிறோம். உதாரணத்திற்கு பளு தூக்குதல் பிரிவில் இந்தோனேசியாவுடன் எங்களுக்கு இணைப்புத் திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுப் பயிற்சிகள் மூலம் அவர்கள் அவர்கள் புதிய அனுபவத்தையும் சுற்றுச்சூழல் மாறுதல்களுக்கு பக்குவப்படுத்திக் கொள்ளும் ஆற்றலையும் பெற முடியும். இதன் மூலம் சுக்மா போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்த இயலும் என்று அவர் சொன்னார்.
சுக்மா போட்டிக்கு விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பூர்வாங்கப் பணி அடுத்த மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்று நடைபெறும் சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் சுக்மா செயலகத் தலைவரின் பெயர் அறிவிக்கப் படும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் நிஸாம் கூறினார்.
விளையாட்டாளர் தேர்வைப் பொறுத்த அவர் அப்பணியை நாங்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால், இப்போட்டியில் சிலாங்கூர் பங்கேற்பது மட்டும் முக்கியமல்ல. மாறாக, சாம்பியன் பட்டத்தையும் வென்றாக வேண்டும் என்றார் அவர்.
வரும் 2026 சுக்மா போட்டியை சிலாங்கூர் ஏற்று நடத்துகிறது. இந்த பிரசித்தி பெற்ற போட்டியை அது கடந்த 1998ஆம் ஆண்டு இறுதியாக ஏற்று நடத்தியது.


