ஷா ஆலம், டிச 31- அடுத்தாண்டு தொடங்கி சட்டவிரோதமாகக் குப்பைகள் வீசப்படும் விவகாரத்தை கையாள்வதில் கோத்தா கெமுனிங் தொகுதி ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் வட்டார மக்களுடன் ஒத்துழைக்கும்.
புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் சாலையோரம் குப்பைகளை வீசும் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமது தரப்பு அங்குள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் 'உளவாளிகளை' நியமித்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கூறினார்.
புக்கிட் கெமுனிங் பகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்படுவதைக் கண்காணிக்க குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்தகையச் சம்பவங்கள் படம் பிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஷா ஆலம் மாநகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
இதற்கிடையில், உயர்கல்வி அமைச்சின் இலக்கவியல் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி (திவேட்) திட்டத்தில் அதிகமான மாணவர்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக அத்திட்டங்களை தாம் ஊக்குவிக்க விரும்புவதாகப் பிரகாஷ் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் டிஜிட்டல் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் மடாணி அரசின் கீழ் திவேட் திட்டத்தில் பங்கேற்கவும் நான் உதவ விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
மேலும், முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்.எஸ்.-1) கீழ் வரையப்பட்ட அனைத்து திட்டங்களும் அடுத்த ஆண்டு முடிக்கப்பட்டு மாநிலத்தின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்துவது கோத்தா கெமுனிங் பகுதிக்கு பலன்களைத் தரக்கூடிய கிள்ளான் பள்ளத்தாக்கு பெருநகர (எஸ்.ஜி.கே.வி.) 2035 செயல் திட்டத்தின் வளர்ச்சி ஆகும்.
ஆர்.எஸ்.-1 மற்றும் எஸ்.ஜி.கே.வி. 2035 இரண்டும் சிலாங்கூரில் அதிக முதலீட்டை ஈர்ப்பதுடன் சிறந்த பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்க முக்கியமானவை என்று அவர் கூறினார்.


