SELANGOR

கன மழையின் காரணமாக கோத்தா கெமுனிங் வட்டாரத்தின் ஓரிரு இடங்களில் திடீர் வெள்ளம்

30 டிசம்பர் 2024, 8:23 AM
கன மழையின் காரணமாக கோத்தா கெமுனிங் வட்டாரத்தின் ஓரிரு இடங்களில் திடீர் வெள்ளம்

ஷா ஆலம், டிச. 30 - நேற்றிரவு தொடர்ச்சியாக பெய்த கன மழையின்

காரணமாக கோத்தா கெமுனிங் தொகுதியின் ஓரிரு இடங்களில் திடீர்

வெள்ளம் ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தினால்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை என்பதோடு குடியிருப்புகளும்

பாதிக்கப்படவில்லை.

தொடர் மழையின் காரணமாக புக்கிட் கெமுனிங், 8வது மைல், ஜாலான்

பத்து பாத்தாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்ற

உறுப்பினர் திருமதி. யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.

கன மழையுடன் கடல் பெருக்கும் ஏற்பட்ட காரணத்தால் வடிகால்களில்

நீர் பெருக்கெடுத்து சாலைகளில் புகுந்ததாகக் கூறிய அவர், சிறிது

நேரத்தில் நீர் வடிந்ததைத் தொடர்ந்து நிலைமை சீரடைந்தது என்றார்.

தற்போதைய பருவ மழை காலத்தின் போது வெள்ளம் ஏற்படும்

சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசு மேற்கொண்டு வரும்

வெள்ளத் தடுப்பு முயற்சிகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்புத் தர

வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

வடிகால்களில் குப்பைகளை போடுவதைத் தவிர்க்கும் அதே வேளையில்

நீரோட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் கால்வாய்களில்

தடுப்புகளையும் அமைக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் வெள்ள நிலைமை

கட்டுப்பாட்டில் உள்ளதாக மாநகர் மன்ற உறுப்பினரான ராமு நடராஜன்

தெரிவித்தார்.

மாநில அரசும் ஷா ஆலம் மாநகர் மன்றமும் மேற்கொண்டு வரும்

பல்வேறு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் காரணமாக இப்பகுதியில் மழை

நீர் விரைந்து வெளியேறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர்

குறிப்பிட்டார்.

இருப்பினும், வெள்ளத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு

ஏதுவாக பொதுமக்கள் தங்கள் பகுதியிலுள்ள கால்வாய்களை சுத்தமாக

வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.