ஷா ஆலம், டிச 29- கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் இரவு நேரங்களில் ஒளியின்றி காணப்படும் மற்றும் விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஏழு சோலார் விளக்குகள் பொருத்தபட்டுள்ளன.
ஜாலான் அம்பாங் பெச்சா ராசாவில் இரண்டு சோலார் விளக்குகளும் கம்போங் ஜாவா, கம்போங் பாசிர், கம்போங் பாயா டாலாம், கம்போங் கிளாப்பா மற்றும் உலு யாம் லாமா ஆகிய இடங்களில் தலா ஒரு விளக்கும் பொருத்தப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாச் சோக் தாவ் கூறினார்.
கோல குபு பாருவில் உள்ள சில இடங்கள் இருள் நேரங்களில் பிரகாசமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான மாநில அரசின் பங்களிப்பாகவும் 'ஒளிரும் சிலாங்கூர் 2024' முன்னெடுப்பின் ஒரு பகுதியாகவும் இந்த சோலார் விளக்குகளை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சோலார் விளக்குகளைப் பொருத்தும் திட்டத்தில் இருண்ட மற்றும் ஆபத்தான பகுதிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. அதே சமயம், உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
அண்மையில் மத்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமர்ப்பித்த சிலாங்கூர் அரசின் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 130 கோடி வெள்ளியில் 43.3 விழுக்காடு வளர்ச்சிக்காக செலவிடப்படுகிறது.
இந்தத் தொகையில் 40 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி உள்கட்டமைப்புத் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுத்தமான நீர் விநியோகம், மிகவும் திறமையான திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலை மற்றும் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளும் அடங்கும்.








