ஷா ஆலம் டிச. 24- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்
தலைமைத்துவத்தின் வாயிலாக கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை வலுப்பெற்றுள்ளது என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிரான தவறான கருத்துகள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு
பிரசாரங்களை முறியடிக்க அன்வார் நிர்வாகத்தின் வெற்றிகள் மக்களுக்கு
எடுத்துரைக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு 22 மாதங்களைக் கடந்து 25
மாதங்களாக பதவியில் நீடிக்கும் முதலாவது பிரதமராக அன்வார்
விளங்குகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அதாவது 19 உறுப்புக்
கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு பிரதமர் தலைமையேற்கிறார்.
அதோடு மட்டுமின்றி கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை பெற்றத்
தலைவராகவும் அவர் விளங்குகிறார் என அமிருடின் கூறினார்.
ஆக்ககரமான கொள்கைகளை வகுப்பதிலும் ஒற்றுமை அரசின்
சாதனைகளின் உருவாகத்திலும் அரசியல் நிலைத்தன்மையின்
அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்துவதற்கு ஏதுவாக பிரதமர் அன்வாரின்
தலைமைத்துவ ஆற்றல் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.
மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டிலான செம்பாங் மாலாம் எனும்
கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத்
தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புத்ராஜெயாவைக் கைப்பற்றியது
முதல் அன்வாரின் நிர்வாகம் ஏறக்குறைய முழுமையான அடைவு
நிலையை பதிவு செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
அன்வார் நிர்வாகத்திற்கு 10க்கு 9 புள்ளிகளை வழங்கிய அமிருடின்,
நாட்டிற்காக அயராது உழைக்கும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தலைவர்
என்றும் புகழாரம் சூட்டினார்.


