ஷா ஆலம், டிச. 24- நாட்டை மேம்படுத்தும் பொறுப்பினை அமைச்சர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்
உள்பட அனைவரும் சேர்ந்து சுமக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு
அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.
எந்தவொரு தோல்வியும் வெற்றியும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, அரசு நிர்வாகத்தின்
அனைத்து உறுப்பினர்களும் இணைந்து சுமக்க வேண்டிய பொறுப்பு
அதுவாகும் என்று அவர் சொன்னார்.
நாட்டின் அரசியல் நிலை மற்றும் தற்போதைய பொருளாதாரம் தொடர்பில்
சில தரப்பினர் பரப்பி வரும் அவதூறுகளை முறியடிப்பதில் அனைத்து
அரசாங்கத் தலைவர்களும் பிரதமருக்கு உதவ வேண்டும் என்று லெம்பா
பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
தகவல் தொடர்புத் துறையில் அமைச்சரவை தோல்வி கண்டால், தகவல்
தொடர்பு அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் என்ற முறையில்
அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் சொன்னார்.
நம்மிடம் அமைச்சர்கள் உள்பட நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உள்ளனர். இதன் மூலம் ஆட்சி மற்றும் நிர்வாகம் செய்யும் கூட்டமைப்பு
உருவாகியுள்ளது. ஆகவே, சுமையையும் நாம் கூட்டாக சுமக்க வேண்டும்
என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் மூத்த ஊடகவியலாளர் டான்ஸ்ரீ ஜோஹான் ஜாபர் நெறியாளராக
இருந்து வழி நடத்திய மீடியா சிலாங்கூரின் செம்பாங் மாலாம் எனும்
உரையாடல் நிகழ்வில் ஃபாஹ்மி இவ்வாறு சொன்னார்.
இந்த நிகழ்வில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும்
இல்ஹாம் சென்டர் நிர்வாக இயக்குநர் ஹிசோமுடின் பாக்கார்
ஆகியோரும் பங்கேற்றனர்.
அரசாங்கம் மீதான அவநம்பிக்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையிலான நிர்வாகம் எதிர்நோக்கும் தற்போதைய சவாலாகும் என
ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
அரசாங்கம் மீதான மக்களின் அவநம்பிக்கை கோவிட்-19 பெருந்தொற்று
பரவலின் போது உச்சத்தை அடைந்தது. அச்சமயம் நாம் பல
விஷயங்களில் குறிப்பாக தடுப்பூசியை பெறுவதில் அரசாங்கத்தின்
உத்தரவுகளை நாம் செவிமடுக்கவும் பின்பற்றவும் வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டது.
இங்கிருந்துதான் அவநம்பிக்கை வைரஸ் வேர்விடத் தொடங்கியது.
பின்னர் அது உலகம் முழுவதும் உள்ள நிர்வாகங்களுக்குப் பரவியது
என்று அவர் சொன்னார்.


