கிள்ளான், டிச. 20 - அடுத்தாண்டில் விளையாட்டுப் பூங்காக்கள் உள்பட
அனைத்துப் பகுதிகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள கிள்ளான்
அரச மாநகர் மன்றம் (எம்.பி.டிகே.கே.) நியமிக்கவுள்ளது.
இந்நோக்கத்திற்காக நியமிக்கப்படும் அந்த குத்தகையாளர்கள் பிரதான
சாலைகளைத் தரம் உயர்த்துவது மற்றும் நிலவடிவமைப்பை பராமரிப்பது
போன்ற பணிகளையும் மேற்கொள்வர் என்று கிள்ளான் அரச மாநகர் மன்ற
டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
தற்போது துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் கே.டி.இ.பி. வேஸ்ட்
மேனேஜ்மெண்ட் நிறுவனம் தவிர்த்து கிள்ளான் முழுவதும் துப்புரவுப்
பணிகளை மேற்கொள்ள மேலும் 50 குத்தகையாளர்களை நாங்கள்
நியமிக்கவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு 2025ஆம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் கலாச்சார நிகழ்ச்சி
நிரல் மற்றும் கிள்ளான் மாவட்டத்திற்கான ஹோப் ஆன் ஹோப் பேருந்து
சேவையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் நகரை அழகுப்படுத்துவதில் கட்டிட உரிமையாளர்களுடன் மாநகர் மன்றம் ஒத்துழைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொலிவிழந்து காணப்படும் கட்டிடங்களை வர்ணம் பூசி அழகுப்படுத்துவது மற்றும் சுற்று வட்டாரத்தை துப்புரவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுடன் மாநகர் மன்றம் சந்திப்பு நடத்தும் என்றார் அவர்.
அதோடு மட்டுமின்றி கூட்டு துப்புரவு இயக்கங்களை மேற்கொள்வதன்
வாயிலாக சமூக நடவடிக்கைளையும் அதிகரிக்கவுள்ளோம். துப்புரவைப்
பேணிக்காப்பது அனைவரின் கடமையாகும். தொடர்ந்து குப்பைகளை
கண்ட இடங்களில் வீசுவது தொடர்ந்தால் நமது அனைத்து முயற்சிகளும்
பாழாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிள்ளான் நகர் துரித வளர்ச்சி கண்ட போதிலும் குப்பைக் கூளங்களால்
மாசடைந்த ஆறு உள்பட பல இடங்கள் இன்னும் அசுத்தமாக
காணப்படுவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அண்மையில் கூறியிருந்தார்.


