ஷா ஆலம், டிச. 17- கடந்தாண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 2,115
கூட்டுறவுக் கழகங்கள் பதிவு செய்யபட்டன. இதன் வழி மலேசியாவில்
கூட்டுறவுக் கழகங்களின் முன்னோடி என்ற பெருமையை சிலாங்கூர்
பெற்றுள்ளது.
இக்காலக்கட்டத்தில் 269 கோடி வெள்ளி சொத்துகளுடன் 70 கோடியே 63
லட்சத்து 19 ஆயிரம் வெள்ளி வருமானத்தை அக்கூட்டுறவுக் கழகங்கள்
பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
மொத்தம் 648,633 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கூட்டுறவுக் கழகங்கள்
கடந்தாண்டு பங்கு மற்றும் நுழைவுக் கட்டணமாக 78 கோடியே 85
ஆயிரத்து 30 ஆயிரம் வெள்ளியை பெற்றன என்று இங்குள்ள ஷா ஆலம்
மாநாட்டு மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவர், ரும்புன் சிலாங்கூர் கூட்டுறவுக் கழகத்தின் 2024ஆம்
ஆண்டிற்கான பாராட்டு விருந்து நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
மாநிலத்திலுள்ள அனைத்து கூட்டுறவுக் கழகங்களும் தங்களின் நிர்வாக
நடவடிக்கைகளை புதுப்பித்துக் கொள்ளும் எனத் தாம் நம்புவதாகவும் அவர்
தமது உரையில் குறிப்பிட்டார்.
அனைத்துக் கூட்டுறவுக் கழகங்களும் சிறந்த நிர்வாகம், இலக்கவியல்
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் திறன் மற்றும் வர்த்தக விரிவாக்கம்
ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்
கொண்டார்.
இந்த மூன்று அம்சங்களின் மீது சிலாங்கூரிலுள்ள கூட்டுறவுக் கழகங்கள்
கவனம் செலுத்தினால் அடுத்த சில ஆண்டுகளில் வருமானத்தை அவை
100 கோடி வெள்ளியாக அதிகரிக்க இயலும் என்றார் அவர்.








