ஷா ஆலம், டிச. 16- கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மாநிலத்திற்கு சிலாங்கூர் அரசு 500,000 வெள்ளியை உதவித் தொகையாக வழங்கும்.
சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளை சரிசெய்வதில் கிளந்தான் அரசு எதிர்நோக்கும் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிந்துரை வரும் புதன்கிழமை நடைபெறும் மாநில அரசு ஆட்சிக்குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டு விவாதத்திற்குப் பின்னர் இறுதி செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.
எங்களிடம் சிலாங்கூர் பரிவு நிதித் திட்டம் உள்ளது. இதன் வழி இந்த மாநிலத்திற்கு மட்டுமின்றி பேரிடரால் பாதிக்கப்பட்ட வேறு எந்த மாநிலத்திற்கும் உதவி நிதி அனுப்பப்படும் என்று அவர் சொன்னார்.
இன்று காலை இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிப் பணிகளுக்காக ஏஹ்சான் மடாணி உதவிக்குழுவை கிளந்தானுக்கு அனுப்பும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசாங்கம் கடந்த
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலா 500,000 வெள்ளியை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


