ஷா ஆலம், டிச 12- பல்வேறு வசதிகளுடன் கூடிய அக்ரோ சிலாங்கூர் செயலியை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் விவசாயத் துறையில் பங்கேற்றுள்ள சுமார் 25,000 பேர் பயனடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கையாக விளங்கும் இந்த செயலி, உதவிக்கான விண்ணப்பங்கள், புகார்கள் மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றை எளிதாக்குகிறது என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
விவசாயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் அல்லது சங்கங்கள் இதற்கு பிறகு கட்டாயம் இந்த செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
விவசாய நவீனமயமாக்கல் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. எனவே பதிவு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் இந்த பயன்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்படுவதை இந்த செயலி உறுதி செய்கிறது என்றார் அவர்.
இன்று இங்குள்ள மாநில அரசு நிர்வாகக் கட்டிடத்தில் இன்று நடைபெற்ற அக்ரோ சிலாங்கூர் செயலியின் தொடக்க விழா மற்றும் விவசாய ஊக்கத்தொகைகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடக்கக் கட்டமாக, பதிவு நடவடிக்கைகளுக்கு Google Play வழியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பதிவு செய்ய www.agroselangor.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என அவர் சொன்னார்.


