ஷா ஆலம், அக். 21- கிழக்கு கடற்கரை இரயில் திட்டம் (இ.சி.ஆர்.எல்.)
காரணமாக கோம்பாக்கில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத்
தீர்வு காண நான்கு நடவடிக்கைகளை எடுக்கும்படி அத்திட்டத்தை
மேற்கொண்டு வரும் மலேசிய ரயில் லிங்க் (எம்.ஆர்.எல்.) நிறுவனத்திற்கு
மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த இரயில் திட்டம் காரணமாக அடிக்கடி வெள்ளப் பிரச்சனையை
எதிர்நோக்கும் கோம்பாக் கம்போங் சின்சின் பகுதியைச் சேர்ந்த 21
குடும்பத்தினர் தங்கள் வீடுகளைக் காலி செய்து தற்காலிகமாக வாடகை
வீடுகளில் தங்கயிருப்பர் என்றும் அதற்கான வாடகைத் தொகையை
அந்நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் தேர்வு
நடைபெறும் தினங்களில் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைப்பதற்கும்
எம்.ஆர்.எல். நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ளப்படும் வெடிச்
சம்பவங்களால் வீடுகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சாலைகளுக்கு
ஏற்பட்ட சேதத்தை அந்நிறுவனம் சரி செய்து தரும் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நீண்ட கால
நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட பகுதியில் வெள்ள நீர் சேகரிப்பு குளம்
அமைக்கப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.
மக்களின் நலன் புறக்கணிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் அதே
சமயம் இ.சி.ஆர்.எல். திட்டம் எந்த இடையூமின்றி மேற்கொள்ளப்படுவதை
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம் உறுதி செய்யும்
என்றும் அவர் உறுதியளித்தார்.
சுமார் 665 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இ.சி.ஆர்.எல். இரயில்
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இதுவரை 67 விழுக்காடு
பூர்த்தியடைந்துள்ளன.








