கோல பெர்லிஸ், செப்.17 - நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கோல பெர்லிஸில் இருந்து லங்காவிக்கு 567 பயணிகளை ஏற்றிச் சென்றபோது மணற்பரப்பில் மோதியதால் கரை ஒதுங்கிய படகு நேற்றிரவு பாதுகாப்பாக லங்காவிக்கு பயணத்தைத் தொடர்ந்தது.
அந்த படகு இழுவைப் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டப் பின்னர் இரவு 9.05 மணிக்கு லங்காவிக்கு பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாக லங்காவி ஃபெரி லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பொது நிர்வாகி பஹாரின் பஹரோம் கூறினார்.
இழுவைப் படகு மூலம் பயணிகள் படகை இழுக்க முயற்சித்த போது அலை கடுமையாக இருந்தது. எனினும், அனைத்து பயணிகளும் நல்ல நிலையில் இருந்ததோடு யாருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படவில்லை. நாங்கள் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்களையும் வழங்கினோம் என்று அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் கூறினார்.
கோல பெர்லிஸிலிருந்து லங்காவிக்கு 567 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நேற்று கோல பெர்லிசிலிருந்து 0.5 கடல் மைல் தொலைவில் பலத்த காற்றின் காரணமாக மணல்பரப்பில் சிக்கியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
கோல பெர்லிஸ் படகுத் துறை முனையத்திலிருந்து புறப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் படகு மணல் கரையை நோக்கி தள்ளப்பட்டதாக பஹாரின் கூறினார்.
லங்காவியில் இருந்து கோல பெர்லிஸுக்கு இரவு 8, 8.05 மற்றும் 8.30 மணிக்கு மூன்று படகுகள் வழக்கம் போல் பயணத்தைத் தொடர்ந்தன. இதில் 1,547 பயணிகள் இருந்தனர்.
அதேபோல், நேற்று மாலை 7.30 மற்றும் 7.35 மணிக்கு லங்காவியில் இருந்து கோல கெடாவிற்கு மொத்தம் 1,300 பயணிகளை ஏற்றிய படகுகள் எந்த பிரச்சினையும் இன்றி சென்றடைந்தன என்று அவர் கூறினார்.








