ECONOMY

நாட்டில் ஜே.ஐ. அமைப்பின் செயல்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது- அமைச்சர் சைபுதீன் உத்தரவாதம்

18 மே 2024, 9:49 AM
நாட்டில் ஜே.ஐ. அமைப்பின் செயல்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது- அமைச்சர் சைபுதீன் உத்தரவாதம்

ஜோகூர் பாரு, மே 18- நாட்டில் ஜெமா இஸ்லாமியா (ஜே.ஐ.) அமைப்பின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஜோகூர், உலு திராமில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை கையாள்வதில் உதவக்கூடிய அளவுக்கு போதுமான தரவு மையத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

இது போன்ற சம்பவங்களை கையாள்வதற்கு தேவையான தரவு மையம் எங்களிடம் உள்ளது. இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சொஸ்மா (2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைத் தடுப்புச் சட்டம்) கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களின் பின்னணியை நாங்கள் வைத்துள்ளோம்.

அத்தகைய தரப்பினர் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாதிருப்பதைக் உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மறு வாழ்வளிக்கும் அணுகுமுறையை கடைபிடிப்பதில் காவல்துறை கவனம் செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் கூட்டத்தில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேனும் கலந்து கொண்டார்.

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆருடங்கள் வெளியிடுவதை தவிர்க்கும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்ட சைபுதீன், ஊடகங்களும் காவல் துறை தரம் தகவல்களின் அடிப்படையில் ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்  கொண்டார்.

நான் ஊடகச் செய்திகளை கவனித்து வருகிறேன். இந்த சம்பவத்துடன் சமயத்தை தொடர்பு படுத்தாமல் ஆதாரங்களை மையமாக கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் என  வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

இந்த தாக்குதல் தொடர்பில் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்ட அவர், நாட்டின் பாதுகாப்பு தங்களின் தலையாய பொறுப்பாக இருந்து வரும் எனவும் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.