ஷா ஆலம், நவ. 16 - சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்ஜை அவமதித்த கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசியை கண்டிக்கத் தவறிய மாநில எதிர்க்கட்சி உறுப்பினர்களை கபடவேடதாரிகள் என கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமது இசுவான் அகமது காசிம் சாடினார்.
கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி மாநிலத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக நடைபெற்ற பிரசாரத்தின் போது அந்த மூத்த பாஸ் கட்சித் தலைவர் சுல்தானுக்கு எதிராக வெளியிட்ட அவமரியாதையான கருத்துக்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதிப்பது குறித்து இசுவான் இவ்வாறு கூறினார்.
மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மைக்கு தங்கள் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்திய சிலாங்கூர் பெரிக்காத்தான் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஆயினும், வடக்கில் இருந்து ஒரு பெரிக்காத்தான் தலைவர் இங்கு வந்து சிலாங்கூர் ஆட்சியாளரை வெளிப்படையாக அவமதித்தபோது அந்த தலைவர்கள் எங்கே சென்றார்கள?என மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024 சிலாங்கூர் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் கேள்வியெழுப்பினார்.
அந்த சம்பவத்தின் போது சனுசியுடன் இருந்த பெரிக்காத்தான் தலைவர்கள் கூட இந்த விஷயத்தில் மௌனம் காத்து வருவதாக பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினரான இசுவான் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் மதிப்பதாகக் கூறிக்கொண்டாலும், இனவாதச் சொல்லாடல்கள் மற்றும் பூர்வக் கதைகளை அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் தலைவர்களின் போக்கை அவர் கண்டித்தார்.
அனைத்து இனங்களையும் மதிப்பதாக அவர்கள் பறைசாற்றுகிறார்கள். ஆனால் இனவாதச் சொல்லாடல்கள் மற்றும் பிரிவினையைப் பரப்புகிறார்கள். எனவே, இந்த மதிப்புமிகு சபையில் நாம் கபடவேடதாரிகளாக இருக்க வேண்டாம் என்றார் அவர்.
ஆட்சியாளர்களுக்கு எதிராக கூறிய அவதூறான கருத்துகள் தொடர்பில் சனுசிக்கு எதிராக கடந்த ஜூலை 18ஆம் தேதி நிந்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன .








