ஷா ஆலம், ஜன 6- தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறைப்பதற்கான வழிமுறையை அரசாங்கம் தொடர்ந்து ஆராயும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
முந்தைய அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்ததும் இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று டத்தோ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
முந்தைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மின் கட்டண உயர்வு தொடர்பான செயலறிக்கை முழுமையாகத் தயாராகி விட்டது. அதைக் கண்ட நான் சவால் மிகுந்த நடப்புச் சூழலில் அந்த கட்டண உயர்வு சாத்தியமில்லை என உணர்ந்தேன் என்றார் அவர்.
கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டாம் என நான் கூறிவிட்டேன். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க விரும்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றிரவு ஆர்பிஎம்மில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிரதமருடனான சிறப்பு நேர்காணலின் போது அன்வார் இதனைக் கூறினார்.
எரி பொருளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையின் மதிப்பு 3,000 கோடி வெள்ளி அளவுக்கு உயர்ந்த போதிலும் மக்களுக்கான மின் கட்டண உயர்வை அரசாங்கம் அமல்படுத்தாது என்று அன்வார் அண்மையில் கூறியிருந்தார்.
வீடுகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், விவசாய நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தித் துறைகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என அவர் வாக்குறுதியளித்திருந்தார்.








