ஷா ஆலம், அக் 14- பண்டான் இண்டா பாரு தொகுதி ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற “ஜோம் ஈசி மின்யாங் மோட்டோர்“ எனும் திட்டத்தின் வழி சுமார் 200 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளோட்டிகளிடமிருந்து கிடைத்த ஆதரவைக் கருத்தில் கொண்டு இந்த இலவச பெட்ரோல் திட்டத்தை இரு வாரங்களுக்கு ஒரு முறை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இதன் மூலம் சமுதாயத்திற்கு உதவும் அதேவேளையில் மக்களின் சுமையையும் குறைக்க இயலும் என அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
தாம் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஆனது முதல் இந்த திட்டத்தை அமல்படுத்தி வருவதாக கூறிய அவர், வட்டார மக்கள் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் பலர் கலந்து கொண்டது தமக்கு வியப்பைத் தந்ததாக சொன்னார்.
மோட்டார் சைக்கிளோட்டிகள் குறிப்பாக உணவு விநியோகிப்பாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த இலவச பெட்ரோல் திட்டத்தை இரு வாரங்களுக்கு ஒரு முறை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.








