பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் புக்கிட் லஞ்சான் தொகுதியில் 800க்கும் மேற்பட்டோர் மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெறுகின்றனர்.
கடந்த ஜூலை முதல் தேதி இத்திட்டத்திற்கான பதிவு தொடங்கியது முதல் அதிகமானோர் இதற்கான விண்ணப்பத்தைச் செய்த வேளையில் சுமார் 200 பேர் இணையம் வாயிலாக பதிவு செய்திருந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எலிசெபத் வோங் கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்பதோடு அவர்களின் சுமையைக் குறைக்கவும் உதவும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமானோர் பயன்பெறுவதை உறுதி செய்ய நாங்கள் சில இடங்களுக்கு நேரில் சென்று பதிவு நடவடிக்கையில் உதவி புரியவுள்ளோம். கணினி மற்றும் இணைய வசதி இல்லாத பலர் நம்மிடையே இருக்கக்கூடும் என்றார் அவர்.
இங்குள்ள டேசா தெமுவான் பூர்வக்குடியினர் குடியிருப்பில் நடைபெற்ற பிங்காஸ் திட்ட பதிவு நடவடிக்கையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில அரசினால் ஏற்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களின் மூலம் பயன்பெறுவதிலிருந்து பூர்வக்குடியினர் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட் மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் ஆகியவற்றின் பதிவு இயக்கமும் இங்கு மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.








