ஷா ஆலம், மே 12- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் “ஷா ஆலம் ஒன் வீல்ஸ்“ எனப்படும் நடமாடும் முகப்பிடச் சேவை இங்குள்ள செக்சன் 9, பிளாசா மசாலாம் கார் நிறுத்துமிடத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும்.
இச்சேவை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
பொது மக்கள் மாநகர் மன்றத்தின் அலுவலகங்களுக்குச் செல்லாமல் வார இறுதி நாட்களில் தங்கள் அலுவல்களை முடித்துக் கொள்வதற்கு ஏதுவாக இந்த முகப்பிடச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடமாடும் அலுவலகத்தில் மதிப்பிட்டு வரி, கார் நிறுத்துமிட அபராதங்களைச் செலுத்த முடியும் என்பதோடு புகார் அளிக்கவும் வர்த்தக மற்றும் அங்காடி லைசென்ஸ் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளவும் இயலும் என்ற அவர் சொன்னார்.
பொது மக்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஷா ஆலம் குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.








