கோலாலம்பூர், அக். 10 – மலேசியாவின் குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த உருவாக்கப்படும் தேசிய முதலீட்டு நிதிக்கு சிலாங்கூர் மாநில அரசு RM50 மில்லியன் வழங்கவுள்ளது.
சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகமான சிடெக் (Sidec) வெளியிட்ட அறிக்கையில், சிலாங்கூர் மாநில அரசு, பினாங்கு மாநில அரசு மற்றும் கஜானா நேஷனல் ஆகிய மூன்று தரப்பினரும் தலா RM50 மில்லியன் பங்களித்து இந்த நிதியை நிறுவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டுமுயற்சி இரு மாநிலங்களின் பலங்களையும் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, உலகச் சந்தையில் போட்டியிடக்கூடிய மலேசியக் குறைக்கடத்தி நிறுவனங்களை உருவாக்க உதவும் என சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவரும் சைடெக் அமைப்பின் தலைவருமான இங் சீ ஹான் தெரிவித்தார்.
குறைக்கடத்தி உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் சோதனைத் துறைகளில் பினாங்கு வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது. அதேவேளையில், ஒருங்கிணைந்த மின்சுற்று (IC) வடிவமைப்பு மற்றும் சிப் புத்தாக்கம் போன்ற முன்னிலைத் தொழில்நுட்பத் துறைகளில் சிலாங்கூர் தனது திறன்களை மேம்படுத்தி வருகிறதுஎன்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னெடுப்பு, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது பிரதமர் அறிவித்த RM1.2 பில்லியன் முதலீட்டுத் திட்டத்திற்குத் துணையாக அமைகிறது.







