ECONOMY

அரசின் சுகாதாரத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த மாநிலம் முழுவதும் பயணம்- மந்திரி புசார் தகவல்

7 ஏப்ரல் 2022, 6:48 AM
அரசின் சுகாதாரத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த மாநிலம் முழுவதும் பயணம்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 7- சிலாங்கூர் அரசின் சுகாதாரத் திட்டங்களை  மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக நோன்புப் பெருநாளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய், இருதயம், கண் புரை ஆகிய நோய்கள் தொடர்பான பரிசோதனைகளையும்  இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

மக்களிடம் முன்வைக்க வேண்டிய சில சிறப்பு மருத்துவ பராமரிப்புத் திட்டங்கள் குறித்து நேற்று கூடிய மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எனக்கு தெரிந்து வரை இந்த அளவுக்கு முழுமையான சுகாதார பராமரிப்பு திட்டங்களைக் கொண்ட மாநில அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ தென்கிழக்காசியாவில் இல்லை என்று நேற்று தனது அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில், உதவித் தலைவர் தியான் சுவா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மக்கள் மத்தியில் இலவச தொற்றா நோய் சோதனைத் திட்ட அமலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் முன்னதாக கூறியிருந்தார்.

இருதய சிகிச்சை, காச நோய் மற்றும் சிலிம் சிலாங்கூர் ஆகிய மூன்று திட்டங்களின் அமலாக்கத்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான மாநில வரவு செலவுத் திட்டத்தில் 61 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேமோகிராம், புரோஸ்டெட், கர்ப்பப்பை வாய் புற்று நோய், பெருங்குடல் புற்றுநோய் சோதனைகளை மேற்கொள்வதற்கு மேலும் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.