ஷா ஆலம், ஜூலை 20- இவ்வாண்டிற்கான நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 1,200 கோடி வெள்ளி முதல் 1.300 கோடி வெள்ளி வரை மட்டுமே இருக்கும் என சிலாங்கூர் அரசு கணித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலம் பதிவு செய்து வந்த 1,700 கோடி முதல் 1,800 கோடி வெள்ளி வரையிலான அந்நிய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை மாநிலம் 900 கோடி வெள்ளி மதிப்பிலான நேரடி அந்நிய முதலீட்டை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட கடுமையான சூழலை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் இந்த பதிவு சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முதலீடு தொடர்பான நமது இலக்கு 1,200 கோடி முதல் 1,300 கோடி வெள்ளி வரையில் மட்டுமே உள்ளது. காரணம், இவ்வாண்டில் மறுபடியும் கோவிட்-19 நோய்த் தொற்று தீவிரமடைந்த போது நமது தொழிலியல் செயப்பாடுகள் 20 முதல் 30 விழுக்காடாக மட்டுமே இருந்தது. நிலைமையை மாற்ற நம்மால் அதிகம் எதுவும் செய்ய முடியாமல் போனது என்றார் அவர்.
எனினும், வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதிக்குள்ள சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பெரியவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதி செய்யும் இலக்கு காரணமாக பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வளர்ச்சிக்கான இலக்கை எட்டாத உயரத்தில் வைக்க தாங்கள் விரும்பவில்லை எனக் கூறிய அவர், ஆகஸ்டு அல்லது மே மாதத்திற்கு பிறகு சிலாங்கூருக்கு சிறப்பான ஒன்று கிடைக்கும் என சொன்னார்.








