ECONOMY

மாமன்னரைச் சந்திக்க அனுமதி கோரி முறையீட்டுக் குழு  கடிதம் தாக்கல்

21 ஏப்ரல் 2021, 4:05 AM
மாமன்னரைச் சந்திக்க அனுமதி கோரி முறையீட்டுக் குழு  கடிதம் தாக்கல்

கோலாலம்பூர், ஏப் 21-அவசரகாலத்தை ரத்து செய்வது தொடர்பான மகஜரை சமர்ப்பிப்பதற்காக மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை சந்திப்பதற்கு அனுமதி கோரி அவசரகால பிரகடனத்தை ரத்து செய்யக்கோரும் முறையீட்டுக் குழு நேற்று அரண்மனையில் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தது.

அக்குழுவின் தலைவர் காலிட் அப்துல் சமாட் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் அந்த கடிதத்தை சமர்ப்பித்தார். அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, பெஜூவாங் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் உள்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மாமன்னரின் முதன்மை  செயலாளர் ஓய்வு பெற்ற கர்னல் டத்தோ நஸிம் முகமது அலிம் அரண்மனை சார்பாக அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

சந்திப்புக்கு அனுமதி கோரும் இந்த கடிதத்தை மாமன்னர் கருணை கூர்ந்து பரிசீலிப்பார் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக காலிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அவசரகாலப் பிரகடனம் பொருளாதாரம், அரசியல் நிலைத்தன்மை உள்பட பல்வேறு நிலைகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அமானா கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநருமான அவர் தெரிவித்தார்.

அவசரகாலம்  ரத்து செய்யப்பட்டு நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என்றார் அவர்.

சந்திப்பு தொடர்பான இந்த  கோரிக்கைக்கு மாமன்னர் செவிசாய்க்காவிட்டால் தேவையான கூடுதல் ஆதாரங்களுடன் புதிய விண்ணப்பத்தை தாங்கள் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலத்தை ரத்து செய்வது தொடர்பில் மாமன்னரை சந்திப்பதற்கு அனுமதி கோரி இக்குழுவினர் அனுப்பிய இரண்டாவது கடிதம் இதுவாகும். கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இதேபோன்ற கடிதத்தை அவர்கள் அரண்மனைக்கு அனுப்பியிருந்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.