அம்பாங், மார்ச் 29- சுகாதார அமைச்சு அனுமதிக்கும் பட்சத்தில் தாங்களும் பொதுமக்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக செல்கேர் நிறுவனம் கூறியுள்ளது.
தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை விரைவாக மேற்கொள்வதில் உரிய பங்களிப்பை வழங்க தாங்கள் பெருமனதுடன் முன்வருவதாக செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
‘பொதுமக்களுக்கு தடுப்பூசியைச் செலுத்துவதற்கு தனியார் கிளினிக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் நாங்கள் அதனை பெரிதும் வரவேற்போம். கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக சமூகத்தின் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்துவதில் தாங்கள் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள கம்போங் பாண்டான், அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் தங்களுக்கு வழங்கினால் இரு வழிமுறைகளைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








