கோல பெராங், பிப் 7- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு அனுமதி வழங்கக்கோரி உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு விண்ணப்பம் செய்யும்.
பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் இதன் தொடர்பிலான விண்ணப்பம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.
உணவகங்கள், வாகனங்களில் உணவு விற்பனை செய்வோர், உணவகத் துறை சார்ந்த தொழிலாளர்கள், உணவுப் பொருள் விநியோகம் செய்வோர் உள்பட இத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரின் நலன் கருதியும் இந்த விண்ணப்பம் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கு ஒரு இடத்திற்கு வழங்கப்படும் அனுமதியானது அந்த துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குறைந்தது ஐந்து பேரின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் மேம்பாடு காண்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.
இங்குள்ள கம்போங் டத்தாரான் லங்காரில் நடமாடும் மளிகைக் கடை விற்பனை முறையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உணவங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி மறுக்கப்படுவது தொடர்பில் உணவக உரிமையாளர்களும் வாகனங்களில் உணவு விற்பனை செய்வோரும் தங்கள் மனக்குமுறலை அமைச்சிடம் தெரிவித்துள்ளதோடு அரசாங்கம் தங்களின் கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயிக்கும் அனைத்து எஸ்.ஓ.பி. நிபந்தனைகளையும் பின்பற்றி நடக்கத் தயார் என்றும் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, ஜவுளிக் கடை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளையும் சீனப் புத்தாண்டு மற்று நோன்புப் பெருநாள் போன்ற விழாக்கள் அடுத்தடுத்து வருவதையும் கருத்தில் கொண்டு ஜவுளி வியாபாரத்திற்கு அனுமதி தருவது தொடர்பான விண்ணப்பத்தை தாங்கள் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








