கோலாலம்பூர், 26 நவம்பர்: விளையாட்டு செய்தியாளர் மற்றும் தேசிய பத்திரிகையாளர் கழகம் துணைத்தலைவர் ஹரேஷ் தியோல் மீது பங்சாரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை விரைவாக நடைபெற வேண்டும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பு, குறிப்பாக அவர்கள் கடமை நிறைவேற்றும் நேரங்களில், எந்த நிலையிலும் தளர்வாக எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்று அவர் கூறினார். “கோத்தா கினாபாலுவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இந்தச் சம்பவம் குறித்து எனக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி மேலும் அறிய நான் சகோதரர் ஹரேஷை தொடர்புகொண்டேன். அவர் போலீஸ் புகார் அளித்துவிட்டு மருத்துவச் சான்றிதழ் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்,” என்று அவர் வெளியிட்ட சமூகத்தளப் பதிவில் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக் இன்று வெளியிட்ட அறிக்கையில், பேரங்காடி ஒன்றின் வாகனம் நிருத்தும் இடம் அருகிலுள்ள ஜாலான் தெலாவிக்குச் செல்லும் நடைபாதையில் நடந்த இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மூவரைத் தேடி வருவதாக தெரிவித்தார்.


