பதவி விலகும் முன் சீனப் பயணப் பணிகளை நிறைவு செய்யும் அந்தோணி லோக்

21 செப்டெம்பர் 2026, 4:50 AM
பதவி விலகும் முன் சீனப் பயணப் பணிகளை நிறைவு செய்யும் அந்தோணி லோக்

கோலாலம்பூர், செப். 21 — சீனாவுக்கான தமது திட்டமிட்ட அதிகாரப்பூர்வப் பயணத்தைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மேற்கொள்ளவுள்ளார்.

பெய்ஜிங்கில் இன்று மற்றும் நாளை நடைபெறும் 12ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்துகொள்வார்.

இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பல இருதரப்பு சந்திப்புகளுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா மற்றும் சீனா அரசாங்கங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், தரைவழிப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் தளவாடம் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கும்.

இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், மலேசியாவின் விமானப் போக்குவரத்து ஆணையமான (CAAM) மற்றும் சீனாவின் விமானப் போக்குவரத்து நிர்வாகத்துக்கு (CAAC) இடையே கையெழுத்தாகவுள்ளது. இது விமானப் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும்.

“CAAM-CAAC இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விமானத் தகுதி, விமானப் போக்குவரத்து அமைப்புகளின் சான்றிதழ், பணியாளர் உரிமம் வழங்குதல், விமானச் செயல்பாடுகளைக் கண்காணித்தல், அத்துடன் கண்டறிதல்கள் மற்றும் இணக்கச் சான்றிதழ்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

பெய்ஜிங்கில் தமது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னர், அந்தோணி லோக் ஷாங்காய் செல்லவுள்ளார். அங்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பிரதிநிதிக் குழுவில் இணைந்துகொள்ளவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதற்கு முன்வைத்துள்ள விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அவர் மலேசியா திரும்புவார் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பு தொடர்பாக ஜனநாயக செயல் கட்சி (DAP) எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ராஜினாமா தொடர்பான முன்மொழிவை முடிவு செய்வதற்கு முன்னதாக, அவரைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறியவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்திருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.