கோலாலம்பூர், அக் 20: கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்புத் திட்டமான ECRL சேவையின் முதல் மாத இயக்கத்தின்போது, பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
ECRL ரயில் சேவை எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் மத்தியில் குறிப்பாக டிசம்பர் 12-ஆம் தேதி சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது.
Transport Expo Asia 2026 கண்காட்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் சேவை தொடங்குவதற்கு முன்னதாக டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என்றும் கூறினார்.
இதன் மூலம், ECRL சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

இந்த 30 விழுக்காடு கழிவுடன், தகுதியுடைய குறிப்பிட்ட பயணிகள் பிரிவினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் சலுகைக் கட்டணங்களும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அந்தோணி குறிப்பிட்டார்.
குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் அரசாங்க ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் 50 விழுக்காடு சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

அதேவேளையில், 13 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 40 விழுக்காடு கழிவைப் பெற முடியும்.
கோம்பாக்கையும் கிளந்தான், கோத்தா பாருவையும் இணைக்கும் ECRL ரயில் சேவை, கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.







