ஷா ஆலாம், நவ.24 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் நிபந்தனை மன்னிப்பு மற்றும் வீட்டுக் காவல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அரசாங்கம் கசியவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
பிரதமர் துறை சட்ட விவகாரப் பிரிவு (BHEUU) அல்லது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) ஆகியவை அந்த ஆவணங்களைப் பொதுமக்களிடம் பரப்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது, பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் ஃபட்லி ஷாரி எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான பதிலைத் தயாரிக்கும் பொருட்டு சில ஆவணங்களை ரகசியத் தன்மையிலிருந்து அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நீக்கியதாக பிரதமர் விளக்கினார்.
எனினும், ஆவணங்களைப் பொதுமக்களிடம் பரப்பியவர்கள் யார் என்பதைக் கண்டறிய உள்துறை அமைச்சு விசாரணை நடத்த வேண்டும். அதற்குப் பதிலாக அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.







