நஜிப்பின் நிபந்தனை மன்னிப்புக்கு தாம் வழிவகுக்கவில்லை: அன்வார் மறுப்பு

21 செப்டெம்பர் 2026, 3:15 AM
நஜிப்பின் நிபந்தனை மன்னிப்புக்கு தாம் வழிவகுக்கவில்லை: அன்வார் மறுப்பு

ஷா ஆலாம், செப். 21 — முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்படுவதற்கு தாம் வழிவகுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

ஒவ்வொரு கைதிக்கும் மன்னிப்புக் கோரி விண்ணப்பிக்கும் உரிமை உள்ளது. அந்த விண்ணப்பம் மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மன்னிப்பு வாரியத்துக்கு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் அதிகாரம் உள்ளதுடன், கூட்டாட்சி நிலையில் பிரதமர் மற்றும் சட்டத்துறைத் தலைவரின் ஆலோசனையும் கருத்தில் கொள்ளப்படும். எனினும் இறுதி முடிவு மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அன்வார் கூறினார்.

தமது முன்னாள் கூட்டாளிகளில் சிலர், நஜிப்புக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நடவடிக்கை எனக் கூறி வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

மன்னிப்பு வழங்குதல் மற்றும் விருதுகள் வழங்குதல் தொடர்பான அதிகாரம், அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கோ அல்லது மாமன்னர்கோ உரியது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

நஜிப்பின் மன்னிப்பு தொடர்பாக தாம் முன்னதாக தெரிவித்த கருத்துகள், மன்னிப்பு வழங்கும் முடிவில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.

மாறாக, நஜிப்புக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற வழக்குகள், விதிக்கப்பட்டுள்ள அபராதம், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் மலேசியாவின் சர்வதேச நிலைப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே தமது கருத்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.

அதேவேளையில், நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பது அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஏனைய சட்ட நடவடிக்கைகளைத் தடுக்காது என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, 1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) தொடர்பான வழக்குகள் மற்றும் ஏனைய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் மடாணி அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்ந்து உறுதியாக இருக்கும்.

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் மீண்டும் உறுதியளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.