அரிய வகை கனிமங்கள், தற்காப்புத் துறையில் பிரான்ஸ் - மலேசியா இடையே முக்கிய ஒப்பந்தம்

17 நவம்பர் 2026, 10:38 AM
அரிய வகை கனிமங்கள், தற்காப்புத் துறையில் பிரான்ஸ் - மலேசியா இடையே முக்கிய ஒப்பந்தம்
அரிய வகை கனிமங்கள், தற்காப்புத் துறையில் பிரான்ஸ் - மலேசியா இடையே முக்கிய ஒப்பந்தம்

கோலாலம்பூர், நவ 17 : அதிக லாபம் ஈட்டக்கூடிய அரிய வகை கனிமங்கள் மற்றும் தற்காப்புத் துறை ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த பிரான்சும் மலேசியாவும் இணக்கம் கண்டன.

இந்த இணக்கம், இரு நாடுகளின் உறவில் ஒரு "புதிய மைல்கல்" என்று மலேசியாவிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார்.

அரிய வகை கனிமங்களுக்கான கூட்டுத் திட்டத்தில் "பிரான்சில் சுத்திகரிப்பு செய்வதற்கான வாய்ப்பும்" இடம்பெற்றுள்ளதாக , மலேசியாவிற்கு இரு நாள் வருகை மேற்கொண்டுள்ள மக்ரோன், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனிடையே, இதை ஒரு "தனித்துவமான" ஒப்பந்தம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

விவேக கைபேசிகள் முதல் போர் விமானங்கள், மின்சார கார்கள் மற்றும் காற்றாலைகள் வரையிலான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கியக் கனிமங்களின் சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சீனாவிற்கு அடுத்தபடியாக ஒரு முக்கிய மாற்றாகப் பல நாடுகளாலும் நாடப்படும் மலேசியா, அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

சீனாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய அரிய வகை கனிம உற்பத்தி ஆலை ஏற்கனவே மலேசியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது பிரான்ஸ் நிறுவனமான கேரெஸ்டர் (Carester) மற்றும் மலேசியாவின் மலாக்கோ மைனிங் (Malaco Mining) ஆகியவற்றுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டுத் திட்டத்தின் மூலம், உயர் திறன் கொண்ட காந்தங்களுக்குத் தேவையான கனிமங்கள் உட்பட மேலும் 13,000 டன் கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும்.

இந்தக் கூட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக மக்ரோன் தெரிவித்தார்.

"இத்திட்டம் கனிமங்களை வெட்டியெடுப்பதை மட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட அளவுகளை உள்நாட்டிலேயே தயார்படுத்துதலையும் உள்ளடக்கியுள்ளது.

அத்துடன், ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கு மிக முக்கிய அங்கமாக விளங்கும் பிரான்சில் சுத்திகரிப்பு செய்வதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது," என்று மக்ரோன் கூறினார்.

இது குறித்துப் பேசிய பிரதமர் அன்வார், "நாம் ஒரு தனித்துவமான காரியத்தைச் செய்துள்ளோம். பொதுவாக நாங்கள் மூலப்பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் பிரான்சுடன் இணைந்து அதைச் செய்ய உள்ளோம். ஏனெனில், கனிமங்களை பிரித்தெடுத்து தயார்படுத்துவதில், மலேசியர்களுடன் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவதிலும் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள்," என்று தெரிவித்தார்.

பேராக்கில் 10 ஆண்டுகால கூட்டு முயற்சியின் கீழ் அரிய வகை கனிமங்களைப் பிரித்தெடுக்கும் ஆலையை அமைக்க மலாக்கோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக கேரெஸ்டர் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.