கோலாலம்பூர், நவ 18 : கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரின் திட்டமிடப்படாத வருகையைத் தொடர்ந்து, மத அவமதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் நிராகரித்திருக்கிறது.
தலைவர்கள் கோயிலின் வெளிப்புறத் தாழ்வாரத்தில் மட்டுமே நின்றதாகவும், சந்நிதிக்குள் நுழையவில்லை என்றும் கோயில் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தெளிவுப்படுத்தினார்.
இந்தக் குறுகிய நேர வருகை முற்றிலும் திட்டமிடப்படாதது என்றும், அதிகாரிகள் அல்லது ஏற்பாட்டாளர்களிடமிருந்து கோயில் நிர்வாகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
"அவர்கள் வருவதே எங்களுக்குத் தெரியாது. அந்த நேரத்தில் நான் மருத்துவமனையில் இருந்தேன். அவர்களை வரவேற்கவோ அல்லது காலணிகள் குறித்த நெறிமுறைகளை எடுத்துரைக்கவோ செயலாளர், பொருளாளர் அல்லது அறங்காவலர்கள் என யாரும் கோயிலில் இல்லை," என்று அவர் கூறினார்.
பெட்டாலிங் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நடைப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம், ஆலய வருகையின் போது இரு தலைவர்களும் அவர்களது பேராளர் குழுவினரும் காலணிகள் அணிந்திருந்தது குறித்து மலேசிய இந்து சங்கம் மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் ஆகியவை கேள்வி எழுப்பியிருந்தன.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக டான் ஸ்ரீ ஆர்.நடராஜா இந்த விளக்கத்தை அளித்தார்.
அன்வார், மக்ரோன் மற்றும் அவர்களது குழுவினர் ராஜகோபுரத்திற்கு (பிரதான நுழைவாயில் கோபுரம்) கீழே உள்ள முன் தாழ்வாரப் பகுதிக்குள் மட்டுமே கால் வைத்ததாகவும், காலணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பிரதான பிரார்த்தனை மண்டபம் அல்லது சன்னிதானத்திற்குள் (கருவறை) ஒருபோதும் நுழையவில்லை என்றும் டான் ஸ்ரீ ஆர்.நடராஜா விளக்கினார்.
நிர்வாகிகள் இல்லாத நேரத்தில் பணியில் இருந்த கீழ்நிலை கோயில் ஊழியர்கள், உயர்மட்டப் பாதுகாப்புப் படையினரையும் வெளிநாட்டுத் தலைவர்களையும் தடுத்து நிறுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டான் ஸ்ரீ ஆர்.நடராஜா, இரு தலைவர்களையும் வரவேற்றதில் கோயில் பெருமை கொள்வதாகவும், வழிபாட்டுத் தலத்திற்கு வந்ததில் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





