கோலாலம்பூர், நவ.17: முதியோர் பராமரிப்பு மையங்களுக்கான சேவை வரி 8 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாகக் குறைக்கப்படும் என மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
இந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மேலும், ஆண்டுக்கு RM96,000 வரையிலான பராமரிப்புக் கட்டணங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழுமையான சேவை வரி விலக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் மாதந்தோறும் RM8,000 வரை பராமரிப்புக் கட்டணம் செலுத்தும் குடும்பங்களின் நிதிச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹஸ்னிசான் ஹாருன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் மக்களவையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையங்களை நிர்வகிக்கும் சமூக நல அமைப்புகளுக்கு அரசு நிர்வாகச் செலவுகள், உணவு அலவுன்ஸ் மற்றும் கட்டடப் பழுதுபார்ப்புக்கான மானியங்கள் உள்ளிட்ட நிதியுதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டத்தின் (PDK) கீழ் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் RM1,200-லிருந்து RM1,500-ஆகவும், பிற ஊழியர்களுக்கான ஊதியம் RM800-லிருந்து RM1,200-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நான்சி தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக 2025-ஆம் ஆண்டில் RM140 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் பராமரிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாண்டு 2,000 பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த எண்ணிக்கையை 2030-ஆம் ஆண்டுக்குள் 50,000-ஆக உயர்த்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.







