அம்மான், நவ.17: தேசிய மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற காரணத்தால், ஜோர்டான் நாட்டில் டெலிகிராம் (Telegram) செயலியை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஜோர்டானின் பொதுப் பாதுகாப்பு அமைப்புவெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிரவாதக் கொள்கைகள் பரவுவதைத் தடுப்பதுடன், தீவிரவாதச் சிந்தனைகளைத் தூண்டும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதும் இந்த முடிவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, கடந்த மாதம் ஜோர்டானில் நடைபெற்ற தேவாலயத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அம்மானில் நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார். மேலும், சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாகவும் ஜோர்டான் தெரிவித்தது.
ரஷ்யாவிலிருந்து வெளிநாட்டில் வசித்து வரும் டெலிகிராம் நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ் உருவாக்கிய இந்தச் செயலியை, ஐ.எஸ். அமைப்பினர் தங்களது அறிக்கைகள் மற்றும் தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜோர்டானில் டெலிகிராம் செயலியை முடக்கும் முடிவு தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விளக்கம் கோரியபோதிலும், அந்நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், டெலிகிராம் செயலி சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் கடந்த ஜூலை மாதம் பாவெல் துரோவ் மீது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
ஆனால், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்துள்ள பாவெல் துரோவ், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.





