ஷா ஆலாம், 25 செப் : மின்கலத் ( பேட்டரி) தொழில்துறை, எரிசக்தி சேமிப்பு, ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மேம்பாட்டில் , நானோ தொழில்நுட்பத்தின் (Nanotechnology) ஆற்றலை சிலாங்கூர் மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மாநிலத்திற்கு புதிய எரிசக்தி மூலங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்தார்.
அதே நேரத்தில், மின்சார (EV) மற்றும் ஹைப்ரிட் (Hybrid) வாகனத் தொழில்துறையின் வளர்ச்சி, மின்கல தொழில்துறையின் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளதாக அவர் கூறினார்.
"மின்சார, ஹைப்ரிட் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சி, மின்கலத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
இதில் எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பம், மின்கல மறுபயன்பாடு மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்கல நிர்வகிப்பு ஆகியவையும் அடங்கும்," என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில், நானோமலே சியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் (அட்ஜ்) டாக்டர் ரெசால் கைரி அஹ்மாட் மற்றும் அவரது குழுவினருடனான சந்திப்பின் போது இந்த விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக அமீருடின் கூறினார்.
தொடர்புடைய தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையிலான ஒத்துழைப்பை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் மந்திரி பெசார் உறுதியளித்தார்.
"இந்த முயற்சி சிலாங்கூர் மாநிலம் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான உத்திகளுக்கு இணங்க அமைந்துள்ளது," என்று அவர் கூறினார்.









