500 புதிய மின்சார வாகன (EV) மின்னூட்டல் நிலையங்களை அமைக்க சிலாங்கூர் அரசு ஆய்வு மேற்கொள்கிறது

3 ஜூன் 2026, 5:45 AM
500 புதிய மின்சார வாகன (EV) மின்னூட்டல் நிலையங்களை அமைக்க சிலாங்கூர் அரசு ஆய்வு மேற்கொள்கிறது

ஷா ஆலம், ஜூன் 3: சிலாங்கூர் மாநிலம் தனது பசுமைப் போக்குவரத்து நிகழ்ச்சி நிரலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 500 புதிய மின்சார வாகன (EV) மின்னூட்டல் நிலையங்களை அமைப்பதற்கான இடங்களைக் கண்டறியும் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு எதிர்வரும் 2027-ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வு ஐந்து விழுக்காடு அளவை எட்டியுள்ளதாகவும், ஈவி (EV) உள்கட்டமைப்பு மேம்பாட்டு இலக்கை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வுப் பணிகள் தற்பொழுது துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் வொல்ட்வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (WHB) நிறுவனத்தின் புதிய ஆற்றல் பிரிவுத் தலைவர் விவேகானந்தன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நகராண்மைக் கழகங்களால் (PBT) பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு இடமும், இந்த மின்னூட்டல் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக அதன் பொருத்தப்பாட்டை உறுதி செய்ய முழுமையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தற்போதுள்ள ஈவி (EV) மின்னூட்டல் நிலையங்களுக்கும் புதிய இடங்களுக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் தேவையான வசதிகளை மேம்படுத்துவதில் டபிள்யூ.எச்.பி (WHB) நிறுவனம் எவ்வாறு உதவலாம் என்பது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய வேண்டியுள்ளது என்று அவர் விவரித்தார்.

மேலும், இந்த வசதிகள் குறிப்பிட்ட சில நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே குவிந்திருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும், உலு சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் போன்ற கிராமப்புறப் பகுதிகளின் தேவைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மிக விரைவாக மின்னூட்டல் செய்யக்கூடிய நேரடி மின்னோட்ட (DC) சார்ஜர்களை நிறுவுவதற்கு, தடையற்ற மின்சார விநியோகம் மிக முக்கிய காரணியாக விளங்குவதாக விவேகானந்தன் கூறினார்.

எனவே, மின்சார விநியோகத் தட்டுப்பாடு உள்ள குறிப்பிட்ட இடங்களில் இந்தச் சவாலை எதிர்கொள்ள, பேட்டரி அடிப்படையிலான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்றுத் தீர்வுகளையும் டபிள்யூ.எச்.பி (WHB) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

இந்த ஈவி (EV) உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்தும் ஒரு பகுதியாக, சிலாங்கூரில் உள்ள அனைத்து உள்ளூர் நகராண்மைக் கழகங்களிலும் ஈவி மின்னூட்டல் நிலையங்களை நிறுவுவதற்கான விண்ணப்ப நடைமுறைகளை முறைப்படுத்த ஷா ஆலம் மாநகராட்சி (MBSA) தற்போது புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது.

இது தொடர்பாகப் பல்வேறு தொழில்துறை பங்குதாரர்களை உள்ளடக்கிய நான்கு கலந்துரையாடல் அமர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. இந்த விவாதங்களின் முடிவுகள் ஒரு திட்ட அறிக்கையாகத் தொகுக்கப்பட்டு, சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் (MTES) பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதலானது செயல்பாட்டு நடைமுறைகள், வாடகை விகிதங்கள், உரிமம் மற்றும் அமலாக்க அம்சங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும், அதே வேளையில் இது கடந்த டிசம்பர் 2023 முதல் சிலாங்கூரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'பிளான்மலேசியா' (PLANMalaysia) வழிகாட்டுதல்களை மாற்றியமைக்காது என்றும் ஷா ஆலம் மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.