மின்சார வாகனத் துறையில் 2 பில்லியன் ரிங்கிட் முதலீடு: சிலாங்கூரைப் பசுமைத் தொழில் நுட்ப மையமாக மாற்றத் திட்டம்

5 மே 2026, 4:37 AM
மின்சார வாகனத் துறையில் 2 பில்லியன் ரிங்கிட் முதலீடு: சிலாங்கூரைப் பசுமைத் தொழில் நுட்ப மையமாக மாற்றத் திட்டம்

ஷா ஆலம், மே 5 - சிலாங்கூர் மாநிலம் மின்சார வாகனங்கள் (EV) தொடர்பான சுமார் 2 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை ஈர்த்துள்ளதோடு, அதன் பயன்பாட்டை ஆதரிப்பதற்காக மின்னேற்று உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு காரணிகளால், புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருப்பதில் இருந்து மாநிலம் மாறுவதற்கான முக்கிய கூறுகளில் ஒன்றாக மின்சார வாகனங்களை வலுப்படுத்தும் முயற்சி அமைந்துள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"நாம் இனி முழுமையாகப் புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருக்க முடியாது. கார்பன் வெளியேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்ச


னைகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வரும் வளங்களையும் நாம் எதிர்கொள்கிறோம்," என்றார்.

"வாகனங்கள் தயாரிக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் விதம் முதல், பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீரமைப்பு (MRO), உதிரி பாகங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகள் போன்ற துணைத் தொழில்கள் வரை முழு சூழலியல் அமைப்பும் மாறும்," என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று நடைபெற்ற, நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புக்கான (Solar Photovoltaic System) திறன் மையமான 'ஆட்டோட்ரானிக்ஸ் சிறப்பு மையம்' (Autotronics Centre of Excellence) தொடக்க விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

மின்சார வாகனத் துறையை முன்னோக்கி கொண்டு செல்ல, துணை உள்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்கள், பராமரிப்பு அமைப்புகள் மற்றும் எதிர்காலத்தில் மின்கலங்களை மறுசுழற்சி செய்யும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அமிருடின் வலியுறுத்தினார். இந்த முயற்சி, சிலாங்கூரில் மின்சார வாகனத் துறையின் திறனை முழுமையாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஒருவேளை ஐந்து ஆண்டுகள் கூட ஆகாது, மூன்று ஆண்டுகளில், இந்த வாகனங்கள் சாலைகளில் குறைந்தது 50 விழுக்காட்டையாவது கொண்டிருப்பதை நாம் காணலாம்," என்று அவர் கூறினார்.

அதே வேளையில், பயிற்சி மற்றும் திறமை மேம்பாட்டை வலுப்படுத்த மாநில அரசு 200,000 ரிங்கிட் பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். இந்தத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்க உள்ளூர் திறமைகளின் வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

திறன் மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மின்சார வாகன மற்றும் சூரிய சக்தி திறன் மையமான ஆட்டோட்ரானிக்ஸ் சிறப்பு மையம், மாநிலத்தின் பசுமைப் பொருளாதார நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது. இந்த மையம், மின்சார வாகன பராமரிப்பு மற்றும் சூரிய சக்தி அமைப்புகளில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி (TVET) திட்டங்களை வழங்குகிறது.

இதுவரை, இத்துறை தொடர்பான திட்டங்கள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகன பட்டதாரிகளையும் 1,500 தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்த மையம் உருவாக்கியுள்ளது.

இதனிடையே, யாயாசான் மாஹிர் மலேசியாவின் 100,000 ரிங்கிட் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை, B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனத் துறைகளில் பயிற்சி பெற நிதியுதவி வழங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.