`லிண்டுங் 24 ஜாம்` திட்டம்: 12,582 பேருக்கு RM20.23 மில்லியன் இழப்பீடு வழங்கிய பெர்கேசோ

15 நவம்பர் 2026, 1:21 AM
`லிண்டுங் 24 ஜாம்` திட்டம்: 12,582 பேருக்கு RM20.23 மில்லியன் இழப்பீடு வழங்கிய பெர்கேசோ

சண்டாகான், நவ 15: லிண்டுங் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தின் (LINDUNG 24 Jam) கீழ், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை மொத்தம் 12,582 சந்தாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு RM20.23 மில்லியன் மதிப்பிலான நலத்தொகைகளைப் பெர்கேசோ (PERKESO) வழங்கியுள்ளது.

வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் மற்றும் துயரச் சம்பவங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என மனிதவளத் துணை அமைச்சர் டத்தோ கைருல் பிர்தாவுஸ் அக்பர் கான் தெரிவித்தார்.

இந்தப் பயனாளர்களில் சபா மாநிலத்தைச் சேர்ந்த 373 பேருக்கு RM481,000-க்கும் அதிகமான நலத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, குறிப்பாக சபா மாநிலத் தொழிலாளர்கள் தங்களது லிண்டுங் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர் நிலையைத் தொடர்ந்து செயலில் வைத்திருக்க வேண்டும் என்றும், முன்னதாக இத்திட்டத்திலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைந்து தங்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சண்டாகானில் நேற்று நடைபெற்ற 'கெண்டூரி ராக்யாட் ஐ லிண்டுங் யூ @ பத்து சாப்பி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், வேலைவாய்ப்புச் சந்தையை வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாட்ட உதவித்தொகை (Elaun Bantuan Mobiliti – EBM) திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் கைருல் பிர்தாவுஸ் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக் காப்புறுதி முறைச் சட்டத்தில் (சட்டம் 800) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 12 தகுதியான பயனாளர்களுக்கு மொத்தம் RM12,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், தொழிலாளர்கள் தங்களது தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கும் ஊக்கமளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என அவர் விளக்கினார்.

மேலும், சண்டாகானில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கிராமப்புறங்கள் மற்றும் சபாவின் உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்களைக் கொண்டுசேர்க்கும் மடாணி அரசாங்கத்தின் முயற்சியை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியின் வாயிலாக பொதுமக்கள் பெர்கேசோவின் சேவைகள், ஆலோசனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.