
ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரில் செயல்படுத்தப்பட்டு வரும் பிங்காஸ் உதவித் திட்டம், 2027-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக RM100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 30,000 குடும்பங்கள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தில் பயனாளர்கள் உதவித்தொகையைப் பயன்படுத்துவதற்கு மைகார்டு (MyKad) முறையைப் படிப்படியாக அறிமுகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், மின்னணுப் பணப்பை (e-Wallet) முறையைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பயனாளர்கள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பயன்படுத்த முடியும் என இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அமிருடின் தெரிவித்தார்.
பிங்காஸ் திட்டத்தின் கீழ், 18 வயதுக்குட்பட்ட குறைந்தது இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தகுதியான குடும்பங்களுக்கு மாதந்தோறும் RM300 உதவித்தொகை வழங்கப்படும்.

அதேவேளையில், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்களுக்கும் மாதந்தோறும் RM150 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இப்பிரிவின் கீழ் 10,000 பயனாளர்களை உள்ளடக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்குத் தொடர்ந்து மாநில அரசு ஆதரவளிக்கும் என அமிருடின் உறுதியளித்தார்.







