மலாக்கா தேர்தலில் 70% வாக்குப்பதிவை எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம்

13 நவம்பர் 2026, 4:15 AM
மலாக்கா தேர்தலில் 70% வாக்குப்பதிவை எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம்

ஜாசின், நவ.13: நாளை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் சுமார் 70 விழுக்காடு வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டுள்ளதாக மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR) தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தலின் முழுமையான முடிவுகள் நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரையில் 70 விழுக்காடு வாக்குப்பதிவு என்பது நல்ல இலக்காகும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இன்று மெர்லிமாவ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பெட்டிகளின் உள்ளடக்கங்களைச் சரிபார்க்கும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், வாக்குப்பெட்டிகள் அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையங்களை வந்தடையும் நேரம் மற்றும் வானிலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம் அமையும் என அஸ்மி விளக்கமளித்தார்.

இருப்பினும், நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக முழுமையான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.

மேலும், மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்பின்படி நாளை பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு அறிவுறுப்படுகின்றனர்.

இதனிடையே, அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று இரவு 11.59 மணியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.