இஸ்தான்புல், நவ.13: உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசொஃப்ட் 365 (Microsoft 365) சேவைகளில் ஏற்பட்டுள்ள திடீர் தடங்கலுக்கு, பயனர்களின் இணையப் போக்குவரத்து அதிகரிப்பு காரணமல்ல.
பல சர்வர்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததே முக்கியக் காரணம் என மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளது.
பல சர்வர்கள் திடீரெனச் செயலிழந்ததால் தொடர்ந்து இயங்கும் பிற உள்கட்டமைப்புகள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது. இதனால் சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தத் தடங்கலால் குறிப்பாக மைக்ரோசொஃப்ட் எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் (Exchange Online) மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவுட்லுக் (Outlook), மைக்ரோசொஃப்ட் 365 மற்றும் டீம்ஸ் (Microsoft Teams) சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கோளாறுகளைச் சீரமைக்கும் நடவடிக்கையாக அனைத்து புதிய கணினி செயல்படுத்தல்களையும் தற்காலிகமாக மைக்ரோசொஃப்ட் நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்தச் சேவைத் தடங்கல் தொடர்பாக அதிகளவிலான புகார்கள் பதிவாகியுள்ளன. சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) இணையத்தளத்தின் தரவுகளின்படி, அவுட்லுக் தொடர்பாக 97,000-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.
அதேபோன்று, மைக்ரோசொஃப்ட் 365 சேவை தொடர்பாக 38,000-க்கும் அதிகமான புகார்களும், மைக்ரோசொஃப்ட் டீம்ஸ் தொடர்பாக சுமார் 4,500 புகார்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், சேவைத் தடங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான அண்மைய தகவல்களை அறிந்துகொள்ள, மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவை நிலவர இணையத்தளம் மற்றும் மைக்ரோசொஃப்ட் 365 நிர்வாக மையத்தைப் பார்வையிடுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவைத் தடங்கல் EX1550543 மற்றும் MO1550821 ஆகிய இரண்டு தனித்துவமான அடையாளக் குறியீடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.







