2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஆண்டுதோறும் 24.7 மில்லியன் புதிய டிமென்ஷியா பாதிப்புகள் ஏற்படலாம்

13 அக்டோபர் 2026, 9:37 AM
2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஆண்டுதோறும் 24.7 மில்லியன் புதிய டிமென்ஷியா பாதிப்புகள் ஏற்படலாம்

சிட்னி, அக். 13 – உலகளவில் டிமென்ஷியா எனப்படும் முதுமையில் ஏற்படும் மறதி நோயின் புதிய பாதிப்புகள் ஆண்டுக்கு 24.7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2023ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 11.4 மில்லியன் புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கியமான மூளை முதுமை ஆய்வு மையத்தைச் (CHeBA) சேர்ந்த ஆய்வாளர்கள் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

18 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நடத்தப்பட்ட 22 மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வுகளில் பங்கேற்ற 38,418 பேரின் தரவுகளை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்த விவரங்களை CHeBA செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

JAMA Neurology என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆண்களைவிட பெண்களிடையே டிமென்ஷியா ஏற்படும் விகிதம் அதிகமாக உள்ளதாகக் காட்டுகிறது.

ஒவ்வொரு 1,000 நபர்-ஆண்டுகளுக்கும் பெண்களிடையே 10.6 புதிய பாதிப்புகளும், ஆண்களிடையே 8.6 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

அதேபோல், அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்நோய் ஏற்படும் விகிதம் கணிசமாக அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஒவ்வொரு 1,000 நபர்-ஆண்டுகளுக்கும் 13.6 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாறாக, அதிக வருமானம் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை 8.3 ஆக உள்ளது.

தற்போது உலகளவில் 57 மில்லியனுக்கும் அதிகமானோர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வுகளின் கணிப்புகளின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 15 கோடியாக அதிகரிக்கக்கூடும்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் டிமென்ஷியா ஏற்படும் விகிதம் அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயம் என ஆய்வின் மூத்த ஆசிரியரும் CHeBA மையத்தின் இணை இயக்குநருமான பேராசிரியர் பெர்மிந்தர் சச்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளில் மக்கள் முதுமையடையும் வேகம் அதிகமாக உள்ளது. இருப்பினும், நோயைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பராமரிப்பு வழங்குவது ஆகியவற்றுக்குத் தேவையான வளங்கள் பெரும்பாலும் குறைவாகவே உள்ளன.

எனினும், டிமென்ஷியா பாதிப்பு விகிதங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கான துல்லியமான காரணங்களை இந்த ஆய்வு கண்டறியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேறுபாடுகளுக்கு உடல்நலம், சமூக, பொருளாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகள் பங்களித்திருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.