வாஷிங்டன், ஜூலை 7- மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 4,800 பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1 விழுக்காட்டினைக் குறிக்கின்றது.
இதில் எக்ஸ்பாக்ஸ் (Xbox) கேமிங் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடிப் பணிநீக்கம் காரணமாக எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உடனடியாக 1,600 பணியிடங்கள் நீக்கப்படுகின்றன.
வேலை நீக்கம் குறித்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில், "எக்ஸ்பாக்ஸ் வரலாற்றிலேயே முக்கியமான மறுசீரமைப்பு தற்போது தொடங்குகிறது. மேலும், எதிர்வரும் ஆண்டில் இன்னும் 1,600 வேலைவாய்ப்புகள் இழக்கக் கூடுமென", அண்மையில் எக்ஸ்பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற ஆஷா சர்மா எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணிநீக்கங்களை அறிவித்த அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் கோல்மேன், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைச் சுட்டிக்காட்டினார்.
"நிறுவனங்கள் தங்களின் துறை மாற வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்க முடியாது; அந்த மாற்றத்தோடு தாங்களும் மாற வேண்டுமா என்பதை மட்டுமே அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும்," எனக் கூறினார்.
இந்த வேலைநீக்கப் பணியிடங்களுக்குப் பதிலாக நிறுவனம் செயற்கை நுண்ணறிவை (AI) மாற்றாகக் கொண்டு வராது என்பதைக் குறிப்பிட்ட அவர், "ஆனால், வேலைகள் செய்யும் முறையை AI மாற்றி வருகிறது என்பது மட்டுமே உண்மை" என்று தெரிவித்தார்.



