நஜிப் நிதிக்கு உலகளாவிய அளவில் ஆதரவு: ரோஸ்மா

21 செப்டெம்பர் 2026, 5:47 AM
நஜிப் நிதிக்கு உலகளாவிய அளவில் ஆதரவு: ரோஸ்மா

ஷா ஆலாம், செப்.21 — முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கான ஒற்றுமை நிதிக்கு மலேசியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள நண்பர்களும் பங்களிக்க முன்வந்திருப்பது தம்மை மிகவும் நெகிழச் செய்துள்ளதாக அவரது மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் மட்டுமின்றி புருனே, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும், கனடா வரையிலும் உள்ள நண்பர்கள் தம்மைத் தொடர்புகொண்டு நஜிப் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

மேலும், நஜிப்புக்காக தொடங்கப்பட்டுள்ள ஒற்றுமை நிதிக்கு தாங்களும் பங்களிக்க விரும்புவதாக அந்த நண்பர்கள் தம்மிடம் தெரிவித்ததாக ரோஸ்மா கூறினார்.

நஜிப் மீண்டும் தமது குடும்பத்தினருடன் இணைந்து இருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் நிபந்தனை அடிப்படையிலான மன்னிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், 5 கோடி ரிங்கிட் அபராதத்தை செலுத்துதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு அவர் உட்பட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, 5 கோடி ரிங்கிட் அபராதத்தை செலுத்துவதற்கு உதவும் வகையில் அம்னோவினால் ‘நஜிப் ரசாக் ஒற்றுமை நிதி’ தொடங்கப்பட்டது.

இந்த நிதிக்கு அம்னோ தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற வகையில் தன்னார்வ அடிப்படையில் பங்களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது கணவருக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் வெளிப்படுத்தி வரும் அக்கறை உண்மையானதும் மனதார வெளிப்படுத்தப்படுவதுமாக இருப்பதாக ரோஸ்மா குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.