கோலாலம்பூர், நவ 12 : கெப்போங்கில், அந்நிய நாட்டவனால் பாராங்கத்தியால் தாக்கப்பட்டு துண்டான, போலீஸ் அதிகாரியின் வலது கை மணிக்கட்டு , 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தமது ஃபேஸ்புக் சமூக தளத்தின் மூலமாக, அந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருந்த கோலாலம்பூர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், தாதியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
" டாக்டர் அல்லென் ராஜகோபால், டாக்டர் அசீஸ் சப்பீர் ஹுசாய்ன் தலைமையிலான மருத்துவ குழுவினர், நுண்ணோக்கி (microscope) மருத்துவ சாதனத்தைக் கொண்டு மிக நுணுக்கமான கவனிப்பு தேவைப்படும் இந்த 8 மணி நேர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்" என சுகாதார அமைச்சர் கூறினார்.
மணிக்கட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்ட லான்ஸ் காப்பரல் அதிகாரியான தியேரி ரோஜர் அனாக் ஃபெண்டிக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளித்த நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவினருக்கும் அவர் பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்.
பணியின்போது காயமைடைந்த லான்ஸ் காப்பரலின் அவசர மருத்துவ தேவையையும், மிக உண்ணிப்பான சிக்கலான அறுவை சிகிச்சையையும், மருத்துவ பணியாளர்கள் திறம்பட மேற்கொண்டனர். இது பொது சுகாதார வசதிகள் எந்நேரமும் திறம்பட்ட நிலையில் உள்ளதைக் காட்டுவதாகவும் , டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
அதே வேளையில், பொது பாதுகாப்பை உறுதி செய்யும் தமது கடமையின் போது காயமடைந்த தியேரியின் தைரியத்திற்கும், தியாகத்திற்கும் மலேசியர்கள் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தியேரி விரைந்து குணமடையவும் அவர் பிரார்த்தித்தார் .
நேற்று, கெப்போங், டேசா அமான் பூரி குடியிருப்பு பகுதியில் பாராங் கத்தி ஏந்தியிருந்த வெளிநாட்டு ஆடவனால் தாக்கப்பட்டதில், தியேரியின் மணிக்கட்டு துண்டானது.







