கோலாலம்பூர், செப். 22 — கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை மருத்துவமனை நிர்வாகம் நாடியுள்ளது.
‘தம்பிராஜன்’ என்ற பெயரில் அறியப்படும் அந்த நோயாளி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் தம்முடன் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் வைத்திருக்கவில்லை. மேலும், தமது அடையாளம் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியாத நிலையில் அவர் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நோயாளியின் அடையாளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக மருத்துவ சமூகப் பணித்துறை தேசியப் பதிவுத் துறையை அணுகியுள்ளது.
சோதனையில், நோயாளி வழங்கிய தகவல்களுடன் பொருந்தக்கூடிய எந்தவொரு பதிவும் தேசியப் பதிவுத் துறையில் காணப்படவில்லை என்று மருத்துவமனை தெரிவித்தது.
எனவே, சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவரை அறிந்தவர்கள் உடனடியாக முன்வந்து கோலாலம்பூர் மருத்துவமனையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நோயாளி தொடர்பான தகவல்களுக்குக் கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவ சமூகப் பணித்துறையை 03-2615 5959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.







