ஷா ஆலாம், செப். 23 — கோலா லங்காட், தெலோக் பங்லிமா காராங் பகுதியில் நீர் மாசுபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் நிறம் மாறிய நீர் மற்றும் எண்ணெய்க் கழிவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வெளியேற்றம் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS) விசாரணைக் கோப்பைத் திறந்துள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி ஜாலான் தெலோக் மெங்குவாங் மற்றும் ஜாலான் பெருப்புக் ஆகிய இரு பகுதிகளில் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது கண்டறியப்பட்டதாக LUAS தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

ஜாலான் தெலோக் மெங்குவாங் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் நிறம் மாறிய நீர் கீழ்நோக்கிப் பகுதியில் தேங்கி, பின்னர் லங்காட் ஆற்றுக்குள் கலப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிறம் மாறிய நீரின் ஓட்டத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சி வளாகம் ஒன்றை LUAS அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வளாகத்துக்கு சிலாங்கூர் மாநிலத்தின் 2024ஆம் ஆண்டு கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்கள் தொடர்பான விதிகளின் கீழ் LUAS நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மேலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிறம் மாறிய நீரின் ஓட்டம் தெலோக் பங்லிமா காராங் தொழில்பேட்டைப் பகுதியில் இருந்து உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், அந்தத் தொழில்பேட்டையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் LUAS கூறியுள்ளது.
இதனிடையே, ஜாலான் பெருப்புக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நிறம் மாறிய நீர் உலோகப் பூச்சு பணிகளை மேற்கொள்ளும் ஒரு வளாகத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அந்த வளாகம் சுற்றுச்சூழல் துறை (JAS) மற்றும் கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தால் (MPKL) ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனை ஒட்டியுள்ள வடிகால் பகுதியில் எண்ணெய்க் கழிவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பொருள் வெளியேற்றப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் நீரின் தரம் தொடர்பான மாதிரிகளை LUAS சேகரித்து, ஆய்வுக்காக மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பியுள்ளது.
நீர் வளங்களை மாசுபடுத்தியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக LUAS 1999ஆம் ஆண்டு LUAS சட்டத்தின் பிரிவு 79(4)-இன் கீழ் விசாரணைக் கோப்பையும் திறந்துள்ளது.






